குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற வகையில், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை அரசு முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் 250 பேருக்கு அதிமுக சார்பில் கரோனா நிவாரணமாக அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. இவற்றை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ, திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தி, கரோனா தொற்றாளர்களை முழுமையாக குணப்படுத்திய பிறகே வீட்டுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
அதேபோல, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் தற்காத்துக்கொள்ள முடியும் என மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்னேற்பாடாக விவசாயிகளுக்கு விதை, உரம் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கான வழியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறப்பதை அரசு முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை ஆணையத்தின் மூலம் தமிழக அரசு பெற வேண்டும்.
உழவர்களுக்கு கடந்த ஆண்டு உழவு மானியம் வழங்கியதுபோல, இந்த ஆண்டும் உழவு மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago