வேலூர் மாவட்டத்தில் - படிப்படியாக குறையும் கரோனா பாதிப்பு : மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகள் காலியாகி வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 304 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2,999 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 751 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் 326 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத் துக்கும் கீழே குறைந்துள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் 150 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு, மேலும் படுக்கைகள் காலியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் 5 ஆயிரத்து 187 படுக்கைகள் உள்ளன. மேலும். 383 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில். 2,500-க்கும் அதிகமான படுக் கைகள் காலியாக உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்தாலும், உயிரிழப்பு விகிதம் சற்றும் குறைய வில்லை. நேற்று ஒரே நாளில் 14 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக உள்ளன.

கரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 90-க்கு மேல் உள்ளவர்கள் காட்பாடி விஐடி மற்றும் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு விதித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவ தாகவும், வரும் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொற்று பரவல் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், கரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்