வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே - கன்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் :

வேலூர் சத்துவாச்சாரி கெங்கை யம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி நேற்று திடீரென சிக்கியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாக னங்கள் அணிவகுத்து நின்றன.

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த பணிகள் முழு ஊரடங்கு காரணமாக தற்போது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கெங்கையம்மன் கோயிலையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கம்பி கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த இடத்தில் சாலையில் குறுகலான பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ராட்சத இயந்திரத்தை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கெங்கையம்மன் கோயில் அருகில் வந்தது. அப்போது, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள கம்பிகளுக்கு இடையில் கன்டெய்னர் லாரி திடீரென சிக்கிக் கொண்டது.

இதனால், லாரி பின்னால் தொடர்ந்து வந்த லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 20 நிமிடத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து மீட்கப்பட்டு மெதுவாக சென்றது.

ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலேயே அந்த பகுதியில் வாகனங்கள் வருகின்றன. இதனால் தான் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இயல் பான நிலை இருந்திருந்தால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

கெங்கையம்மன் கோயில் அருகில் நடைபெறும் சுரங்கப் பாதை பணியை விரைந்து முடித்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE