செங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் உறுதி

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தீர்ந்ததையடுத்து தடுப்பூசி செலுத்த காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிக அளவில் வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மாவட்ட மக்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தப்படும் கரோனா சிறப்பு முகாம்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.

செங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் நேற்றுடன் தீர்ந்தன. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாததால் தடுப்பூசி செலுத்த முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் முகாம்களில் உள்ள சுகாதார துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் ஏமாற்றம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கரோனாவைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதை உணர்ந்து நாங்கள் தடுப்பூசி போட விரும்பி, மையங்களுக்குச் சென்றால் மருத்துவ பணியாளர்கள் ‘இன்று தடுப்பூசி கிடையாது’ என்று கூறி வருகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்கிறோம். இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு இதற்கு உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு செங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் நேற்றுடன் தீர்ந்துவிட்டன.

மாவட்டத்துக்கு, தேவையான தடுப்பூசிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விரைவில் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களுக்கும் கரோனா தடுப்பூசி பிரித்து வழங்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்