திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகைபொருட்கள் தொகுப்பு விற்பனை நேற்று தொடங்கியது. இதை திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
இதனை, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தியாள்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்ததாவது:
கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் தடுக்கும் வகையிலும், அவர்களை நோய் தொற்றிலிருந்து காக்கவும் ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் கடந்த ஒரு வாரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தலா ரூ.400, ரூ.750 என பொருட்களின் அளவுக்கேற்ப விற்கப்படும் இந்த தொகுப்புகளில், துவரம்பருப்பு, சர்க்கரை, மிளகாய் தூள் உள்ளிட்ட 12 பொருட்கள் அல்லது 14 பொருட்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் தற்போது காய்கறி, மளிகைபொருட்கள் விற்பனை செய்யும்நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது 1,195 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையும், 384 நடமாடும் வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனையும் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக காய்கறி, பழங்கள் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், மளிகை பொருட்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago