மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் - தொற்றாளருடன் யாரும் தங்க அனுமதி கூடாது : முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் கரோனா தொற்றாளர்களுடன் உறவினர்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூரில் கரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டிருக்கும் நகராட்சி ஊழியர்களுக்கு அதிமுக சார்பில் அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நேற்று வழங்கிய அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தொற்று பரவலின் முதல் அலையில் ஆட்சியாளர்களாக இருந்து மக்களைக் காப்பாற்றியிருக்கிறோம். தேர்தல் அறிவிப்பிக்குப் பிறகு தொடங்கிய கரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதைக் குறைப்பதற்கு ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்க வேண்டும்.

கரோனா தொற்றாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருப்பதால், சிறிய வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். அங்கு தனிமைப்படுத்திக் கொள்ளும்போது, குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே, மாவட்டம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்களை அதிகப்படுத்தி, அங்கே அவர்களை தங்கவைத்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கியுள்ள கரோனா தொற்றாளர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, அவர்களின் உறவினர்களும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால், கரோனா தொற்று கூடுதலாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, தொற்றாளர்களுடன் உறவினர்கள் தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.

தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடி தொடங்குவதற்கு ஏதுவாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகள் சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு வாய்ப்பாக, அணை திறப்பு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்