தடுப்பூசி போட்டு கொண்டதால் விரைவில் குணமடைந்தேன் : வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கரோனா தொற்றில் இருந்து சுவாச பிரச்சினை எதுவும் ஏற்படாமல் 5 நாளில் குணமடைந்தேன் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோருக்கு முகக்கவசம், கையுறை, ஃபேஸ் ஷீல்ட், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் வேலூர் உட்கோட்ட காவலர்களுக்கு கரோனா பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் பணி நேற்று நடை பெற்றது.

வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது ‘‘தேர்தல் பணி முடிந்த பிறகு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன். கரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் தனி அறையில் அனுமதித்தார்கள். ஆனால், அங்கு தனியாக இருக்காமல் வீடு திரும்பி என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனா தொற்றில் இருந்து 5 நாட்களில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் குணமடைந்துவிட்டேன். இதற்கு காரணம் தடுப்பூசி போட்டுக் கொண்டதுதான்.

கரோனா தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாக காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உங்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை 1,200 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கரோனா தொற்று ஏற்பட்ட காவல் துறையினர் 3 பேருக்கு தான் ஐசியுவில் சிகிச்சை பெறும் நிலை இருந்தது. அவர்கள் மூவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனக்கு சுவாச பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. உடல் சோர்வாக மட்டும் இருந்தது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்