எமரால்டு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தால், கரோனா காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு. இப்பகுதியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு, தனியார்மருத்துவமனையோ, ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லாததால், சிகிச்சைக்காக தொலைதூரத்தில் உள்ள மஞ்சூர் அல்லது உதகைக்கு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். உரியநேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல், நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில், உதகை-மஞ்சூர் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் அரசு மருத்துவமனை கட்ட ரூ.14 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டது. விபத்து, அவசர சிகிச்சை,கர்ப்பிணிகளுக்கான 24 மணி நேர சிகிச்சை என 50 படுக்கை வசதியுடன்கூடிய மருத்துவ மனைக்கானகட்டுமானப்பணிகள், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தொடங்கின. ஓராண்டுக்குள் பணிகள் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. கரோனா காலத்தில் இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தால், குந்தா தாலுகாவில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க பெரும் உதவியாக இருக்கும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பழனிசாமி கூறும்போது ‘‘எமரால்டு காவல்நிலையம் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் 2.80 ஏக்கரில் ரூ.14.80 கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் மருத்துவமனையில் பணிபுரிய ஒரு பல் மருத்துவர்உட்பட 7 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால்,மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடையும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago