விழுப்புரம் மாவட்டத்தில் - 150 படுக்கைகளுடன் செயல்படும் கரோனா சித்த மருத்துவமனை :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 150 படுக்கைகளுடன் கரோனா சித்தமருத்துவமனை இயங்கி வருகிறது.

விழுப்புரம் அருகே பெரும் பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில்கரோனா சிகிச்சைக்காக சிறப்பு சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் மாலா தலைமையில் 3 மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சிமுறையில் பணியாற்றுகின்றனர். 150 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. இங்கு இதுவரை 493 பேர் அனுமதிக்கப்பட்டு தற்போது 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறியது:

முதலில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் வேப்ப இலை மாத்திரை, தாளிசாதி சூரணம் வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைவாக வரும் நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர், ஆடாதோடை குளிகை போன்றவை வழங்கப்பட்டு 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் அவர்களுக்கான ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்துகிறோம். தினமும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மருத்துவமனையில் தயார் செய்யப்படுகிறது. மேலும் திருமூலர் பிராண பயிற்சி மற்றும்சுவாச பயிற்சிக்கான யோகாசனங்களும் கற்பிக்கப் படுகிறது.

சிகிச்சை முடித்து வீடு திரும்புகிறவர்களுக்கு ஆரோக்கிய மருந்துகள் வழங்கப்பட்டு அவர்களை வீடுகளுக்குள் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத் தப்படுகிறது என்று தெரிவித்தனர்.

சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் அதிக அளவில் நோயாளிகள் குணமாகி செல்லுவதற்கு முயல்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்