திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ, நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை நேற்று ஆய்வு செய்தார்.
ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி, தொழுவூர் பாலிடெக்னிக்கில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு மையம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், பின்னர் வலங்கைமானில் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 905 என்ற அளவில் உள்ளது.
கரோனா தொற்றின் 2-வது அலையின் வீரியம் அதிகமாக உள்ளதால், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர, யாரையும் குறை சொல்வதற்கில்லை. இதைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டம் முழுவதும் முழுமையாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும். மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
18 முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைவருக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. எனவே, கூடுதல் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது, வலங்கைமான் ஒன்றியக் குழுத் தலைவர் சங்கர், குடவாசல் ஒன்றியக் குழு துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago