நீலகிரி மாவட்டங்களில் வாகனங்கள்மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை, அரசு நிர்ணயித்த விலையைவிட, கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் இன்று (நேற்று) 434பேர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போதுவரை படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு மட்டும் மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, கரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியினர் நலன் கல்லூரி மாணவிகள் விடுதியை 40 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணிநடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 9 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவிர்க்க முடியாத காரணங் களுக்காக வெளியில் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். பல்வேறு அரசுத்துறை மற்றும் தனியார் சார்பில் 268 வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், அதிகவிலைக்கு விற்பனை செய்தால்பொதுமக்கள் புகார் அளிக்கலாம். காய்கறிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago