திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஒரே படுக்கையில் இரு தொற்றாளர்களுக்கு சிகிச்சை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் ஒரே படுக்கையில், இரு தொற்றாளர்கள் சிகிச்சைபெறும் நிலை உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கையில், திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால்பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஒட்டு மொத்தமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தொடர்ந்து கரோனா படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா வார்டு உள்ளது. இந்த வார்டில் பலரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதால், அங்கு படுக்கைகள் காலியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் படுக்கைகளுடன் கூடிய காத்திருக்கும் கரோனா வார்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், போதிய படுக்கை வசதி இல்லாததால், ஒரேபடுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கும், ஆக்சிஜன் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வர்கள் கூறியதாவது: உடலில், தொற்றின் வீரியம் குறைவாக உள்ளவரும், அதிக தாக்கம் உள்ளவரும் ஒரே படுக்கையில் இருக்க வேண்டியநிலை வருகிறது.

தொற்று குறைவாக உள்ளவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்தால், உடல்ரீதியாக கடும் தாக்கத்தைகரோனா தொற்று ஏற்படுத்தும். ஆகவே தனித்தனி படுக்கை வசதியை உடனடியாக செய்து தர வேண்டும், என்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் கூறியதாவது: திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா வார்டில் ஒவ்வொருவருக்கும் தனி படுக்கை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருப்பதை நிவர்த்தி செய்யும் வகையில் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இனி, அந்தவார்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்