வேலூர் மாவட்ட அளவில் செயல்படும் கரோனா கட்டளை அறையை தொடர்பு கொண்ட 651 பேருக்கு சேவைகள் அளித்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பால் நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அதேபோல், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் மருத்துவ மனை நிர்வாகங்கள் திணறின. இதையடுத்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் ‘வார் ரூம் - கட்டளை அறை’ அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை குறித்த ஒதுக்கீடு முறைப்படுத்தப்பட்டது.
மேலும், 1077 என்ற கட்டணம் இல்லாத எண்ணில் தொடர்பு கொள்பவர்களுக்கு ‘வார் ரூமில்’ இருந்தபடி மாவட்ட அளவில் எந்தெந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கரோனா நோயாளிகளுக்கு எந்த வகையான படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை தெரிந்துகொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் இந்த ‘வார் ரூம் - கட்டளை அறை’ 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து நடவடிக் கைகளும் கண்காணிக்கப்பட்டது.
இந்த கட்டளை அறையை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப் பினர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த கட்டளை அறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
கடந்த ஒரு வார காலத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி கேட்டு தொடர்பு கொண்ட 651 பேருக்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது மாநில அளவில் சிறப்பான செயல்பாடாக கருதப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிலிண்டர் விநியோக பணியை கண்காணிக்க வேலூர் வருவாய் கோட்டாட்சியர் தனி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரத்தில் வார் ரூமை தொடர்பு கொண்ட 651 பேருக்கும் அவர்கள் கோரிய சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி மாவட்ட அளவில் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவைக்கான அனைத்து அழைப்புகளுக்கும் ஒதுக்கீடு முடிந்துள்ளது.
ஆக்சிஜன் படுக்கைக்காக யாரும் காத்திருக்கவில்லை. இது மாநில அளவில் சிறப்பான செயல்படாக மாநில அளவில் பாராட்டு பெற்றுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago