அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் - கேரளா மாநிலம் வயநாட்டில் 2 இடங்கள் உட்பட9 தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

By செய்திப்பிரிவு

அரசு காப்பீட்டுத் திட்டம் மூலமாக,கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 2, நீலகிரி மாவட்டத்தி லுள்ள 7 என 9 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, அந்த நோயாளிகளுக்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட எல்லையிலுள்ள கேரளா மாநிலத்திலும் சேர்த்து மொத்தம் 9 தனியார் மருத்துவமனைகளில் 656 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

உதகையில் உள்ள எஸ்.எம்.மருத்துவமனை (30), சிவசக்தி (20), குன்னூர் நன்கெம் (30), சகாயமாதா (16), கோத்தகிரி கே.எம்.எஃப். (25), கூடலூர் அஸ்வினி (25), புஷ்பகிரி (33), வயநாடு இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (360), விநாயகா (100) ஆகிய 9 தனியார் மருத்துவமனைகளில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக கரோனா சிகிச்சை வழங்கப்படும். இதில், பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், நீலகிரி மாவட்ட திட்ட அலுவலரை 7373004241 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்