தமிழகத்தில் வேளாண் பணிகளைத் தொடங்க விவசாயிகளுக்குப் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
விவசாயிகள் தங்களுடைய வேளாண் பணியைத் தொடங்குவதற்கு வேண்டிய பயிர்க் கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா முதல்கட்ட நிவாரண நிதி வழங்கும் பணி 97% நிறைவடை ந்துள்ளது. டோக்கன் கொடுத்து பணம் வாங்காதவர்களுக்கு அவர்களது வீடு தேடிச்சென்று பணம் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என்றார். தொடர்ந்து அமைச்சர் கூறுகையில், முன்னாள் அமைச்சர்செல்லூர் ராஜூ திமுக அரசை என்ன வேண்டுமானாலும் குறை சொல்லலாம். நேற்று தேனியில் நடந்த கரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். நடவடிக்கை எடுப்பது குறித்து கருத்துத் தெரிவித்தாரே தவிர, அவர் எந்தக் குறையும் சொல்லவில்லை. செல்லூர் ராஜூசொல்வது எல்லாம் விருப்பு வெறுப்புடன்தான் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago