சிவகங்கை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதில் சிக்கல் : 40 பணியிடங்களுக்கு 10 விண்ணப்பங்களே வந்துள்ளன

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 மருத்துவர்களுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 10 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை அளிக்க ஷிப்டு முறையில் 180 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிய 40 மருத்துவர்களை தற்காலிகப் பணிக்கு நியமிக்க உள்ளதாகவும், தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனால், கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பணிக்காக தற்காலிகமாக 20 மருத்துவர்கள் புதிதாக பணி அமர்த்தப்பட்டனர். அதில் தற்போது 14 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா பணியில் 8 மணி நேர ஷிப்டுக்கே மருத்துவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் தருகின்றனர். இதனால் அரசு தரும் ரூ.60 ஆயிரம் மாத ஊதியத்துக்கு பணியில் சேர மருத்துவர்கள் விரும்புவதில்லை என்று கூறினர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘10 விண்ணப்பங்களே வந்துள்ளன. பணி வாய்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் விண்ணப்பங்கள் வர வாய்ப்புள்ளது. உரிய தகுதியுள்ளோருக்கு விண்ணப்பித்த உடனே பணி வழங்கப்படும் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்