10 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று : விருதுநகரில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 3 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியில் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியையும், செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஆட்சியர் இரா.கண்ணன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), அசோகன் (சிவகாசி), ரகுராமன் (சாத்தூர்), மான்ராஜ் (வில்லிபுத்தூர்) மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் ஒட்டுமாத்த நோய் தொற்று 5.69 சதவீதத்திலிருந்து 14.4 சதவிதமாக உயர்ந்துள்ளது, கடந்த 10 நாட்களில் 3 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, தடுப்பூசி மருந்து போதிய அளவில் இருப்பில் உள்ளன. 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வேண்டும் என விருதுநகர் ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார். அவை விரைவில் வழங்கப்படும். ஒரு மாதத்தில் ஆக்சிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விருதுநகர் மாறும்.

விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே உள்ள 401 ஆக்சிஜன் படுக்கைகளில் 72 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா நோயாளிகளுக்காக 4,593 படுக்கைகளில் 1,306 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. ஐசியூ படுக்கைகளில் 14 படுக்கைகள் காலியாக உள்ளன. நெடுஞ்சாலை, பட்டாசு ஆலை விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க விரைவில் டிராமா கேர் மையம் அமைக்கப்படும். ராஜபாளையம் பகுதியில் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளது. இதைச் சரிசெய்யும் வகையில் கார் ஆம்புலன்ஸ்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தேனி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன் பட்டி கிராமத்தில் 110-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறையினர் நடத்தியுள்ளனர்.

இக்கிராமத்துக்கு நேற்று வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டுகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஓடைப்பட்டி, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்தார். பின்பு தேனியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது இயங்கி வரும் ஆக்சிஜன் நிலையத்தின் கொள்ளளவு 10 ஆயிரம் லிட்டரிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்