சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்குப் பணியாளர்கள் தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காலில் விழுந்து முறையிட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பல்நோக்குப் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் பல்நோக்குப் பணியாளர்கள் சிலர் தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அமைச்சர் காலில் விழுந்தனர்.
அமைச்சரிடம் பணியாளர்கள் கூறியதாவது: எங்களில் பலர் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகிறோம். கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வும் இல்லை. ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. எங்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்காததால் நிவாரணத் தொகை கிடைக்காத நிலை உள்ளது என்றனர்.
முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago