100 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் : வேப்பனப்பள்ளியில் ஆட்சியர் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பிஜிஎம் மஹாலில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளது.

இச்சிறப்பு சிகிச்சை மையத்திற்கு தேவையான 100 படுக்கை வசதிகள், 5 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 600 படுக்கை விரிப்புகள், 10 பல்ஸ் ஆக்ஸிமீட்டர், 4 பிபி கருவி மற்றும் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான இதர மருத்துவ உபகரணங்களை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ-வுமான கே.பி.முனுசாமி வழங்கி உள்ளார். இம்மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்து, திறந்து வைத்தார்.

அப்போது ஆட்சியர் கூறும்போது, தமிழக முதல்வர் உத்தரவுப்படி, மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

தற்போது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்களுக்காக சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மாவட்ட தொற்று நோய் திட்ட அலுவலர் திருலோகன், ஊராட்சி மன்ற தலைவர் கையிலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்ன கிருஷ்ணன், பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் உட்பட மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE