காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் கர்நாடகா அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கிவிட்டதாக கர்நாடக மாநில முதல்வர் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். அதன்பிறகு, எனது தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஏப்.12-ம் தேதி சென்று மேகேதாட்டு பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, அங்கு அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தோம்.
இதுதொடர்பாக, பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் கடந்த மே 25-ம் தேதி தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் தானே வழக்கு பதிவு செய்து, ஜூலை 5-ம் தேதிக்குள் அறிக்கை தரும் வகையில், ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதில், கர்நாடகாவின் அணை கட்டுமானப் பணி சட்டவிரோதமானது என்பதை பசுமைத்தீர்ப்பாய நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்து கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று (நேற்று) கூட்டியிருக்கிறார். இதேபோல, தமிழகத்தில் இது தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாகக் கூட்டி, அனைத்து கட்சிகள், விவசாயிகளை ஒருங்கிணைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை, ஆட்சியர் வே.சாந் தாவிடம் பி.ஆர்.பாண்டியன் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago