செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் நள்ளிரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இரவில் திடீர் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றன. கரோனா பாதிப்பால் பணியாளர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பழுது சீரமைப்பதில் தாமதம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, மாம்பாக்கம், மறைமலை நகர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், நள்ளிரவில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இந்த நிலை கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. அதுவும், நள்ளிரவு, 12:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டால், காலையில்தான் மின் விநியோகம் சீராகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, “நள்ளிரவில் ஏற்படும் மின்தடையால் அனைவரும் தூங்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பகல் நேரத்தில் கடும் வெயில் அடிப்பதால் இரவிலும் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் விடிய விடிய தூங்க முடியாமல் தவிக்கிறோம்.
குறிப்பாக, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, வீட்டு தனிமையில் இருப்பவர்கள், மின்தடையின்போது வெளியில் நடமாடுவதால், தொற்று பரவும் அபாயமும் உள்ளது” என்றனர்.
இந்த மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “வழக்கமாக கோடை காலத்தில் மின் உபயோகம் அதிகரிக்கும். தற்போதும் ஊரடங்கு இருப்பதால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் மின் பயன்படும் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் 30-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பழுது சீரமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மின்தடை பிரச்சினைகளை சீரமைக்க உரிய நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago