பள்ளி வாகனங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தி ஆம்பு லன்ஸ் வாகனங்களாக இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித் துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழ்வேளூர் கிருஷ்ணா மகால், திருக்குவளை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
முன்னதாக, திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள், மருத்துவக் குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், கரோனா தடுப்பூசி முகாம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.
வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (இன்று) அதிகளவில் தனிமைப்படுத்தும் மையங்கள் திறக்கப்பட உள்ளன. நாகை மாவட்டத்தில் மருத்துவமனை இல்லாமல் 200 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 70 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களே இல்லாத நிலை இன்னும் 10 நாட்களில் உருவாக்கப்படும்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு, பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க, அவர்களின் வீடுகளுக்கேச் சென்று, சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்காக 24 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, இங்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறுவது தவறான தகவல்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தாமாக முன்வந்து பொதுமக்களுக்கு திமுகவினர் சேவை செய்தனர். அதேபோல, பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சேவை செய்ய எதிர்க்கட்சியினர் தாமாக முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம். அதை விட்டுவிட்டு, எங்களை அழைக்கவில்லை என்று கூறுவது தவறு என்றார். ஆய்வின்போது ஆட்சியர் பிரவீன் பி.நாயர், முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஆம்புலன்ஸாக பள்ளி வாகனங்கள்
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைகள், ஆலத்தம்பாடி, கச்சனம், எடையூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் 80 கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தேவையான கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உள்ளிட்டோரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பள்ளி வாகனங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தி ஆம்புலன்ஸ் வாகனமாக இயக்குவதற்கும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிளான்ட் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago