வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது வீட்டில் நேற்று கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா போராட்டக்குழுவின் அறிவிப்பை ஏற்று, மே 26 கருப்பு தினமாக பின்பற்றப்படுகிறது. இதை அடையாளப்படுத்தும் விதமாக விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், அவர்களை அழைத்துப் பேச பிரதமர் மோடி மறுத்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக அழைத்துப் பேசி, வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளிப்பதுடன், வேளாண் விரோத சட்டத்துக்கு எதிராக தென்னிந்தியாவில் திருப்புமுனையை உருவாக்கும் என்றார்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது வரவேற்கத்தக்கது
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago