கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை - மயானத்தில் வைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் : சுகாதாரத் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

குன்னத்தூர் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக்கொள்ளாததால், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயானத்தில் வைத்துச் சென்றது தொடர்பாக சுகாதாரத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (40). தறி தொழிலாளி.

இவர், சகோதரர் செந்தில்குமார் (38), தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த வாரம் செந்தில்குமார் கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்.இதையடுத்து, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஈஸ்வரமூர்த்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

குன்னத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனை, பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது சடலத்தை வாங்குவதற்கு உறவினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால், தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குன்னத்தூர் மயானத்தில் வைத்துவிட்டுச் சென்றதாக தெரிகிறது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஊராட்சி நிர்வாகம், வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, "கரோனா தொற்றால் ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்தார். அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. இதனால் அவரது சடலத்தை தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயானத்தில் வைத்துவிட்டு சென்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளிரவெளி பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மருத்துவ முகாம் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை நேற்று மேற்கொண்டனர்.

குன்னத்தூர் அருகே கரோனா தொற்றுக்கு ஆளாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 20-ம் தேதி உயிரிழந்த நிலையில், தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்