திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - 2,467 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கியது :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2,467 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை நேற்று தொடங்கியது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஒரு வாரதளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 1,018 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை நேற்று தொடங்கியது.

இதை, ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி பகுதிகளில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வேளாண்மை துறை துணை இயக்குநர் பாண்டியன், பேரூராட்சி உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர், ஆவடிமாநகராட்சி ஆணையர் நாராயணன், திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகளின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது:

தளர்வில்லா முழு ஊரடங்கின்போது, பொதுமக்கள் வெளியே வராத வண்ணமும், அவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க ஏதுவாகவும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகம், விற்பனை ஆகிய துறைகள் மூலம் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை இவை செயல்படும்.

மாவட்டத்தில் தேவைக்கேற்றவாறு நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட தொகுதிகளில் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் எம்எல்ஏக்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையை நேற்று தொடங்கி வைத்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,224 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மாளிகை பொருட்கள் விற்பனை நேற்று தொடங்கியது. ‘‘இந்த வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 66 ஆயிரத்து 893 குடியிருப்புகளுக்கும் சென்று காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் ஈடுபட உள்ளன.

மேலும், நடமாடும் வாகனங்கள் காய்கறி, மளிகை பொருட்களை தரமாகவும், உரிய விலையுடனும் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் குறை இருந்தால் பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்’’ என, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 225 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை நேற்று தொடங்கியது. இதை காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் அருகே மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குன்றத்தூர் பகுதியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நடமாடும் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், பெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளில், எம்எல்ஏக்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்