கோளப்பன்சேரி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உள்ள - பழைய கட்டிடத்தை உடனடியாக அகற்ற கோரிக்கை :

By செய்திப்பிரிவு

பட்டாபிராமை அடுத்த கோளப்பன்சேரியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இடிந்துவிழும் நிலையில் உள்ளகட்டிடத்தை இடித்து அகற்றுவதோடு, சேதம் அடைந்த பிற கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமை அடுத்த கோளப்பன்சேரியில் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 167 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.

இப்பள்ளியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் உள்ளது. இக்கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:

கோளப்பன்சேரியில் உள்ள இப்பள்ளி இப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி பயில பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால், இப்பள்ளியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. இங்குள்ள கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

தற்போது போதிய பராமரிப்பின்றி எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இக்கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இல்லையெனில், இக்கட்டிடம் பள்ளி மாணவர்களின் உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும்.

சமூக விரோத செயல்

மேலும், மாணவர்கள் கல்வி பயிலும் பிற வகுப்பறை கட்டிடங்களும் மிகவும் சேதம் அடைந்துள்ளன. வகுப்பறையின் மேற்கூரைகளின் சிமென்ட் காரை பெயர்ந்துள்ளது. அத்துடன், வகுப்பறை ஜன்னல்கள் உடைந்துள்ளன.

இதனால், சமூக விரோதிகள் வகுப்பறைக்குள் நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன், பள்ளியில் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிட நலத் துறை அதிகாரிகள், தாட்கோநிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன. எனவே, மாணவர்களின் நலன் கருதி இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக இப்பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்