முழு ஊரடங்கையொட்டி அனைத்து வகையான கடைகள் திறக்கப்பட்டதால் மார்க்கெட் பகுதிகளில் திரண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். உழவர்சந்தை உள்ளிட்ட கடைகளில் காய்கறி களின் விலை இரண்டு மடங்காக விற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வில்லாத ஊரடங்கு இன்று (மே-24) முதல் அமலுக்கு வருகிறது. இதை யொட்டி, சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி நேற்று இரவு வரை அனைத்து வகையான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடைகள் திறப்பு நேற்று கடைசி நாள் என்பதால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள மார்க்கெட், சந்தைகள், உழவர் சந்தைகள், தற்காலிக காய்கறி அமைக்கப்பட்ட பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் அளவுக்கு அதிகமான கூட்டம் திரண்டது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக் கோணம் என அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் விழாக்கால கூட்டம் போல் திரண்டனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு முண்டியடித்தபடி பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வேலூர் அண்ணாசாலை, மண்டித் தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை தொடங்கி இரவு வரை கூட்டம் குறையாமல் காணப்பட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் என திரண்ட கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உழவர் சந்தை, காய்கறி கடைகளில் தக்காளி, கத்திரிக்காய், பீன்ஸ், முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது.
ஒரு சிலர் வியாபாரிகளிடம் விலை ஏற்றம் குறித்து சண்டை யிட்டாலும் வேறு வழியில்லாமல் வாங்கிச் சென்றனர். அதேபோல், இறைச்சி கடைகளிலும் கூட்டம் நிரம்பியது.
பேருந்துகள் இயக்கம்
ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அதிகளவில் குவிந்தனர். ஆனால், திருச்சி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப் பட்டன. அதேபோல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள புறநகர் பகுதிகளுக்கு 70 அரசுப் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம்
கரோனா தொற்று பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட் டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி, அனைத்து கடைகளும் நேற்று திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர், சேத்துப்பட்டு, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், ஜமுனாமரத்தூர் உட்பட அனைத்து நகரங்களிலும் கடைகள் திறக்கப்பட்டன.
இதனால், கடை வீதிகளில் கடல் அலையை போல் மக்கள் திரண்டனர். இதனால், பிரதான சாலைகள் உட்பட அனைத்து வணிக வீதிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.
அத்தியாவசியப் பொருட்கள்வாங்க சென்ற பொதுமக்கள், முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடை பிடிக்கவில்லை. கூட்டம் கூட்டமாக, மக்கள் கூடியதால் தொற்று பரவ லானது மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சமடைந் துள்ளனர்.
கடந்தாண்டை போல், வாக னங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காய்கறிகளை வாங்க மக்கள் குவிந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காய்கறிகளின் விலையை இரு மடங்காக உயர்த்தி, வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். அவர் களது செயலால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்ற வெங்காயம் ரூ.40-க்கும், ரூ.30-க்கு விற்ற உருளைக்கிழங்கு ரூ.60-க்கும், ரூ.15-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.30-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.50-க்கும், ரூ.40-க்கு விற்ற பீட்ரூட் ரூ.60 என அனைத்து காய்கறிகளையும் இரு மடங்கு உயர்த்தி கொள்ளை லாபத்துக்கு வியாபாரிகள் விற்பனை செய் துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கொள்ளையடிப்பது போல், காய்கறி விலையை உயர்த்துவதை வியாபாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்தாண்டு மார்ச் மாதம், இதே போல் விலையை உயர்த்தி விற்றனர். அவர்களது செயல் கண்டிக் கத்தக்கது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago