கரோனா கட்டுப்பாட்டு மண்டலங் களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 121-ஆக அதிகரித்துள்ளதுடன், மாநகரில் 36 இடங்களில் அதிக அளவு பாதிப்பு இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1700-க்கும் மேற்பட்டோர் கரோனாதொற்றால் பாதிக்கப்படுவதால், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 40-ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை, தற்போது 121-ஆக அதிகரித்துள்ளது.
இங்கு கரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வரும் வரை, அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில், மாநகரில் மட்டும் குமார் நகர், கே.பி.என்.காலனி, பிச்சம்பாளையம், முத்து நகர், குளத்துப்புதூர் மங்கலம் சாலை, நெசவாளர் காலனி, கருவம்பாளையம்,பாண்டியன் நகர், கூத்தம்பாளையம், அண்ணா காலனி, கல்லாங்காடு, செட்டிபாளையம் ஏ.பி.ஆர்.காலனி, 15 வேலம்பாளையம், டி.எஸ்.ஆர். லே-அவுட் உட்பட 36 பகுதிகள் அடங்கும்.இதேபோல, வெளி ஆட்கள்கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் பழைய பேருந்துநிலையம், மேட்டுப்பாளையத்திலுள்ள பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago