கரோனா பரவல் ஆபத்தில் இருந்து தொழிலாளர்களை காக்க - பாதுகாப்புத் துறை தொழிற்சாலையை தற்காலிகமாக மூட வேண்டும் : தமிழக முதல்வருக்கு, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் ஆபத்தில் இருந்து தொழிலாளர்களை காக்க, ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்கு, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, படைத்துறை உடைத் தொழிற்சாலை தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் பொதுச் செயலாளர் சி.குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான படைத் துறை உடைத் தொழிற்சாலை (ஓசிஎஃப்), திண்ஊர்தி தொழிற்சாலை (எச்விஎஃப்), இன்ஜின் தொழிற்சாலை ஆகியவற்றின் நிர்வாகங்கள் அனைத்துத் தொழிலாளர்களையும் பணிக்கு வர நிர்பந்தம் செய்தன.

இதுதொடர்பாக, அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில்,தொழிற்சாலைகளின் பொதுமேலாளரை சந்தித்து, தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் பொதுப் போக்குவரத்து இல்லாததால், 5 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரியக் கூடிய வாய்ப்பை அளித்தது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும், தொழில் உறவை பாதிக்கக் கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, மாநில பால்வளத் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கரோனா நோய் தாக்குதலை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அனைத்து தொழிலாளர்களையும் வீட்டில் இருந்து பணிபுரிய, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு உரியவழிகாட்டுதல்களை பிறப்பிக்குமாறு கோரி இருந்தோம்.

இதற்கிடையே, மத்திய அரசின் உத்தரவின்படி, 50 சதவீததொழிலாளர்கள் வேறு வழியின்றி அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில், வரும் 31-ம் தேதி வரை மேற்கண்ட தொழிற்சாலைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதோடு, தொழிலாளர்களை வீட்டில் இருந்துபணிபுரியக் கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, மாநில அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்