சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோட்டக்கலை மூலமாக, நடப்பு 2021-22-ம் ஆண்டில் சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்காக ரூ.20.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி 3,300 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தரப்படும். 7 ஆண்டுகளுக்குப் முன்பு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்த விவசாயிகளும் இந்த மானியத்தில் குழாய்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

50 சதவீத மானியம்

மேலும், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பலவித உபகரணங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.25 ஆயிரம், டீசல் பம்ப் செட் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், கிணறு, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

எக்டேருக்கு ரூ.3 ஆயிரம்

மேலும், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய்கள் பதிக்க குழி எடுக்க ஆகும் செலவை அரசு மானியமாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்