வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை - மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் :

By செய்திப்பிரிவு

ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ளது வாணாபுரம் ஊராட்சி-பகண்டை கூட்ரோடு கிராமம். இங்கு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், ஊட்டச்சத்து அலுவலகம் மற்றும் பல்வேறுஅரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது 15படுக்கை வசதிகளுடன் உள்ளது.மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே அதிக பிரசவம் நடைபெறும் மருத்துவமனையாகவும், தினசரி அதிக அளவில் நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையாகவும் உள்ளது.

இந்த மருத்துவமனை சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மருத்துவ மனையில் 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பணியிடங்கள் இருந்தும் காலையில் மட்டும் மருத்துவர்கள் பணி செய்வதால், மாலை நேரத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை நோயாளிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரிஷிவந்தியம் ஒன்றியம் மற்றும் தொகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களை கொண்டு துறை வாரியாக தினசரி சர்க்கரை,ரத்தக் கொதிப்பு உட்பட பல்வேறு இணைய நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ரிஷிவந்தியம் வட்டாரசுகாதார மருத்துவர் அலுவலகம் இங்கிருந்து செயல்பட்டால் தொகுதியிலுள்ள மணலூர்பேட்டை ,சீர்பனந்தல், மணிமுத்தாடேம், ரிஷிவந்தியம் மருத்துவ மனைகளை கண்காணிக்க வசதியாக இருக்கும். எனவே வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் அலுவலகம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்பட வசதியாக அனைத்து விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷிடம் கேட்டபோது, "தற்போது அந்த மருத்துவமனை 24 மணி நேரம் இயங்குகிறது. ஆனால் மாலை 4 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் இருப்பர்.

எனவே கூடுதல் மருத்துவர்நியமனத்திற்கு அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம். விரைவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் வகையில் செயல்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்