ஊரடங்கு காரணமாக மாம்பழங்களின் விற்பனை சரிந்துள்ளதால் போதிய விலை கிடைக்காமல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு, கன்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மா விளை ச்சல் அதிக அளவில் இருக்கும். கடந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தது. அதனால் விலையும் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருக்கிறது. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தற்போது கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மாம்பழம் விற்பனை குறைவாக உள்ளது. இதைக் காரணம் காட்டி கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனையாகக் கூடிய சப்பட்டை, பஞ்சவர்ணம் ரக மாம்பழங்களை வியாபாரிகள் ரூ.5 முதல் ரூ.15 ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயித்து ஏலத்தில் எடுக்கிறார்கள். போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
எனவே, மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்யவும், கிராமப் பகுதியில் நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இச்சங்கத்தின் நிர்வாகிகள், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியனிடம் மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago