கரோனா ஊரடங்கால் - செடிகளில் கருகும் கேந்திப் பூக்கள் : மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்ததாக விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் அணைக் கட்டு வட்டாரத்தில் கேந்திப் பூக்களை பறிக்க முடியாமல் செடி யிலேயே கருகுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டாரத்தில் மல்லி, முல்லை, கேந்திப் பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளது. சுமார் 300 ஏக்கரில் விளையும் பூக்கள் வேலூர் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள், வியாபாரிகள், சிறிய பூக்கடைகள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்கள் வியாபாரத்தில் பலனடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், கரோனா ஊரடங்கு காரணமாக பூ வியாபாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பூக்கள் வியாபாரம் இல்லாததால் பூக்களை பறிக்காத விவசாயிகள் செடியில் அப்படியே விட்டு விடுகின்றனர். இரண்டாவது ஆண்டாக கரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் ஏரிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான சுமார் ஓர் ஏக்கர் விவசாய நிலத்தில் கேந்திப்பூ பயிரிட்டுள்ளார். ஊரடங்கால் பூக்களை பறிக்க முடியாத சூழல் குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரு நாற்றை 2 ரூபாய்க்கு வாங்கி 3 ரூபாய் செலவு செய்கிறோம். எனது நிலத்தில் மட்டும் 7 ஆயிரம் கேந்திப்பூ நாற்றை நட்டு பராமரித்து வந்தேன். நடவு செய்த 45 நாளில் பூக்கத் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் அறுவடை செய்ய முடியும்.

இந்தாண்டு அறுவடை தொடங்கிய நேரத்தில் ஊரடங்கால் பூக்களை பறிக்க முடியவில்லை. அப்படியே விட்டு விட்டோம். பூக்கள் மெல்ல மெல்ல நிறம் மாறி கருகத் தொடங்கி விட்டது. ஏறக்குறைய 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்தது நஷ்டம்தான். தினசரி 50 கிலோ வரை பூக்களை பறித்து வேலூர் மார்க்கெட்டில் விற்றால்தான் போட்ட பணத்தையாவது எடுக்க முடியும்.எதிர்பார்த்த விலை விற்றால்தான் லாபமும் கிடைக்கும்.

கரோனா ஊரடங்கால் திருமணம், திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. இறப்பு சம்பவங்களுக்கும் பூக்களை விற்க முடியாத நிலை இருக்கிறது. எங்களுக்கு அடுத்த முறை கேந்திப்பூ நாற்றை இலவசமாக வழங்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்