திண்டிவனம் அருகே - மனைவியை கொன்ற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கைது :

By செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே ஒலக்கூர்கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). வைரபுரம்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாரதாம்பாள் (62). கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணன் வீட்டின் மாடியிலும், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் விஜயகுமாருடன் சாரதாம்பாள் வீட்டின் கீழ்தளத்திலும் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு விஜயா, சுந்தரி, விஜயகுமார், ராமசந்திரன் என்ற பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் விஜயா ஒலக்கூரிலும், சுந்தரி சிறுவாடி கிராமத்திலும், ராமசந்திரன் புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர்.

கிருஷ்ணன், தனது மனைவி சாரதாம்பாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்புசாரதாம்பாள், தான் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக கூறியதால் அவரது மகள்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நேற்று முன்தினம் வீட்டில் விட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சாரதாம்பாள் வீட்டில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஒலக்கூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அவரை இரும்பு கம்பி, அரிவாள்மனை போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து போலீஸார் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்