பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை வாங்கி மக்கள் வீடுகளில் பயன்படுத்த வேண்டும் : நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலககூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சமய மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், முண்டியம் பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் மாவட்டத்தில் தற்போது வரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி கையிருப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி உள்ளிட்ட விவரம் குறித்து கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

இதேபோல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடமும் கேட்டறிந்தார். காவல் கண்காணிப்பு அலுவலரிடம் காவல்துறை சார்பாக ஊரடங்கு காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிகள், முகக்கவசம் அணியாதவர்கள் மீது செலுத்தப்பட்ட அபராதம் விவரம் மற்றும் காவல்துறையினரால் கரோனா விழிப்புணர்வு மேற்கொள் ளப்பட்ட விவரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடமும் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பின் தங்களை தாங்களாகவே ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வாயிலாக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள், பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவிகள் விடுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட்ட கரோனா சிகிச்சைப் பிரிவினையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்டகாவல் கண் காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங்,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முதல்வர் குந்தவிதேவி, திட்ட இயக்குநர் காஞ்சனா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்