ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் : தேவையான அளவு ஆக்சிஜன் : நேரில் பார்வையிட்ட ஆய்வுக்குழு தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆக்சிஜன் இருப்பு, கரோனா நோயாளிகளுக்கான உணவு, தேவையான வசதிகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தனர்.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், சார் ஆட்சியர் சுகபுத்ரா, மருத்துவக் கல்லூரி டீன் எம்.அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நவாஸ்கனி கூறியதாவது:

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இதில் 300-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர். ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் கரோனா அறிகுறி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அறிகுறி தெரிந்தவுடன் ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகள் கரோனா பரிசோதனை செய்து கொண்டு, சிகிச்சை பெற வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப் குமார் கூறுகையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக மருத்துவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE