சிவகங்கையில் தற்காலிக காய்கறி சந்தையில் அம்மன் வேடமணிந்து கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த வரிடம் பொதுமக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை தினசரி சந்தையில் கூட்டம் கூடுவதைத் தடுக்க பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் இடைவெளிவிட்டு தற்காலிக சந்தை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காமலும் உள்ளனர். அவர்களை நகராட்சி அதிகாரிகள், போலீஸார் பலமுறை எச்சரித்தும் பலன் இல்லை.
இதையடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி அதிகாரிகள், போலீஸார் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நாட்டுப்புறக் கலைக்குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆல்பர்ட் ராஜா, அம்மன் வேடமணிந்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப் போது முகக்கவசம் அணியாதவர் கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களை வேப் பிலையால் அடித்து விரட்டினார். மேளதாளத்துடன் பாடல் பாடி அவரது குழுவினர் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பொதுமக்கள் பலர் அம்மன் வேடம் அணிந்தவரின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago