நீலகிரியில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட - 400 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனாதொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 400 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பங்கேற்று அத்யாவசியப் பொருட்களை வழங்கினார். பின்னர், அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தைப்பொறுத்தவரை சுற்றுலா என்பது மிகவும் முக்கியமானதாகும். கரோனா தொற்று நோய் பாதிப்பினால் சுற்றுலா பயணிகள்வருகை தடை செய்யப்பட்டுள்ள தாலும், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினாலும் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள், அதிக அளவில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டுபாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் இன்றைய தினம் உதகையில் முதற்கட்டமாக 400 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளைய தினமும் சுமார் 580 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குன்னூர்,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்று நோயால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவி செய்ய தாமாக முன்வர வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா தொற்று நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்கள் மற்றும்மார்க்கெட் பகுதிகளில் அதிகஅளவில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் புதிதாக கரோனா தொற்று நோய் ஏற்படுகின்ற நிலைஉள்ளது. தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, அரசு தெரிவித்துள்ள நேரத்தில் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் குப்புராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்