உதகை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜனை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மருத்துவமனை பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 13,427-ஆக உள்ளது. நேற்று முன்தினம் இரவு உதகை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து உதகை அரசு தலைமை மருத்துவமனை பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
உதகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. கூடுதலாக ஆக்சிஜனை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசி உதகைக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியான பின்னர் அதனை நிரப்ப, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நீலகிரிக்கு என முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உதகை அரசு மருத்துமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. கரோனா சிகிச்சைக்கு வருபவர்கள் தாமதமாக வருவதால், அவர்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டியுள்ள கூடலூர் பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, காய்ச்சல், சளி உள்ளிட்ட சாதாரண அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் மக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago