ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகரக்காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்ததமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநகர காவல் ஆணையர்க.கார்த்திகேயன் வழிகாட்டுதலின் பேரிலும், துணை ஆணையர் ப.சுந்தரவடிவேல் மேற்பார்வை யிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஊரடங்கு சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் மாநகரக் காவல் துறை செயல்படுகிறது.
14.5 லட்சம் அபராதம்
திருப்பூர் மாநகரில் கடந்த 3-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை, ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 668வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 205 இருசக்கரவாகனங்கள், 49 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.முகக் கவசம் அணியாதவர்கள் மீது 6,987 வழக்குகளும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 221 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, ரூ.14 லட்சத்து 52,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் தேவையின்றி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இ-பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விதிமுறைகளை மீறுவோர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என குறிப்பிடப் பட்டுள்ளது.
டிரோன் கண்காணிப்பு
திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, டிரோன் கேமரா மூலம் புஷ்பா திரையரங்க வளைவு பகுதியில் போலீஸார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இ-பதிவு இன்றி வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இ-பதிவு முறை சரிபார்க்கப்பட்டது. உரிய அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago