‘டவ் தே’ புயல் காரணமாக பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாத காரணத்தால், நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டிருந்த தேசிய பேரிடர்மீட்புக்குழுவினர் அரக்கோணத்துக்கு திரும்பினர்.
‘டவ் தே’ புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ‘ரெட்அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சாலை மற்றும் குடியிருப்புகளில் மரங்கள் விழுந்தன. மாவட்டத்தில் தீவிர மழை பெய்யாததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
இதனால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று அரக்கோணத்துக்கு திரும்பினர். நேற்று மதியம் உதகை நகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், கோடப்பமந்து கால்வாய் நிரம்பியது. ஆரணி ஹவுஸ் சந்திப்பு மற்றும் லோயர் பஜார் பகுதியில் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்தது. நேற்று மாலை 4 மணியளவில் உதகையில் 33.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அவலாஞ்சியில் 9, எமரால்டில் 5, கோத்தகிரியில் 3, குந்தாவில் 1 மி.மீ. மழை பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago