செங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் : 10 நாட்களில் 215 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அதே வேகத்தில் பலர் நலமடைந்து வீடுதிரும்பினாலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் பெரும்பாலும் முற்றிய நிலையில், அதாவது மூச்சுத் திணறல் ஏற்படும் போதுதான் மருத்துவமனையை நாடுகின்றனர். அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவமனை செல்லாமல் மருந்தகங்களில் மருந்துகளை உட்கொள்கின்றனர்.

கரோனா மீதான பயமும், பதற்றமும் உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் (மே 7முதல் 16 வரை) 215 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் 10 முதல்20 பேருக்கும் மேல் உயிரிழப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இணை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை (மே 16)மொத்தம் 1,13,419 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்98,401 நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13,788 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரைமொத்தம் 1,230 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகளைத் தடுக்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும். ஆக்சிஜன், கரோனா தடுப்பு மருந்துகளின் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க அரசு வழிவகைசெய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் உயிரிழப்புகள், கரோனா பாதிப்புகளை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்