தி.மலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு - தடையை மீறி திறக்கப்பட்ட 50 கடைகளுக்கு அபராதம் : மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நேற்று அமலில் இருந்ததால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின. தடையை மீறி திறக்கப்பட்ட 50 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இந்நிலையில் தொற்று பரவல் தீவிரமடைந்ததால், கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், கடந்த 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு நேற்று மீண்டும் அமலுக்கு வந்தது. வழக்கமான நாட்களில் திறக்கப்படும் மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சி கடைகள் போன்றவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவ சேவைகள் தடையின்றி தொடர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணா மலையில் உள்ள பிரதான சாலைகளான மாட வீதி, போளூர் சாலை உட்பட வர்த்தக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. கடைகள் மூடப்பட்டிருந்தன. பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் வலம் வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதேபோல், ஆரணி, போளூர், செங்கம், தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், வந்த வாசி, செய்யாறு, வெம்பாக்கம், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் வட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் கண்காணித்தனர். அதேநேரத்தில் தடையை மீறி பூக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட சில கடைகள் திறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் தடையை மீறி திறக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கடைகளை மூடி வருவாய்த் துறை யினர், உள்ளாட்சித் துறையினர் மற்றும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்