சிகிச்சை பெற வருவோருக்கு தற்காலிக தீர்வாக - திருப்பூர் அரசு மருத்துவமனையில் ‘ஆக்சிஜன் பேருந்து' ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்புக்குள்ளானவர் களை காக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் 10, தனியார் மருத்துவமனைகள் 34 என 44 மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இந்நிலையில் புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழலைத் தவிர்க்க, தனியார் அமைப்புகள் இணைந்து ‘ஆக்சிஜன் பேருந்து’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன.

தனியார் பள்ளிப் பேருந்தில் ரூ.10 லட்சம் செலவில் 10 லிட்டர்கொள்ளளவு கொண்ட 6 ஆக்சிஜன்கான்சன்டிரேட்டர் இயந்திரங்கள் பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த கருவியானது சாதாரண சூழ்நிலையில் இருந்து, ஆக்சிஜனை பிரித்தெடுத்து சுத்திகரித்து நோயாளிக்கு அனுப்பும்.

இந்த பணிகள் முடிந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவனைக்கு பேருந்து கொண்டுவரப்பட்டது. மருத்துவ மனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்கும் வரை, நோய் தொற்று உடையவர்கள் இந்த பேருந்து மூலம் தற்காலிகமாக ஆக்சிஜன் பெற்று, அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதனை மருத்துவக் கல்லூரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் தலைமையிலான மருத்துவர்கள் பார்வையிட்டனர்.

ஒரே நேரத்தில் 6 பேர்

இதுதொடர்பாக தனியார் அமைப்பினர் கூறும்போது, "அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோருக்கு தற்காலிக தீர்வாக, மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 6 பேர் பயன்படுத்தலாம். நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கிடைப்பதற்கான தற்காலிக ஏற்பாடு இது. சோதனை முயற்சியாக மூன்று நாட்கள் வரை பயன்படுத்திவிட்டு, அதன்பின் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் பேருந்து நிறுத்தி வைக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்