காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - ரூ.2,000 கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நிவாரண உதவியாக ஒரு குடும்பத்துக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக ரூ.192.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரர் கோயில் தெரு கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கரோனா அச்சுறுத்தல் தமிழகத்தில் மீண்டும் திரும்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மக்களின் துயரங்களை போக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் முதல் கட்ட உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் 2,07,66,950 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்க ரூ.4,153.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 653 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்தத் தொகை வழங்கப்படும். மொத்தம் உள்ள 3,60,252 குடும்ப அட்டைகளுக்கு ரூ.72.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பெறுவதற்கான டோக்கன்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை மே 15-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, துணை பதிவாளர் சரோஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,031 கடைகள் மூலம் 6 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மணி கூண்டு அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர் க.செல்வம் முன்னிலை வகித்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 031 நியாயவிலைக் கடைகள் உள்ளன. மொத்தம் உள்ள 6,01,443 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.120 கோடியே 28 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் செங்கல்பட்டு கூட்டுறவு துணைப் பதிவாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்