தற்காலிக கரோனா வார்டுகள் அமைக்கும் பணி : காஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் தற்காலிக கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதியுற்று வருகின்றனர். இதனால் அதிக அளவில் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வேகமாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினார்.

நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

விரைவில் இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை மூலம் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த உணவை வழங்கிய சி.வி.எம்.பி.எழிலரசன் பின்னர் அதே மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவமனை முக்கிய அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE