தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக - ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா தொற்றாளர்கள் : ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காததால் அவதி

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காததால், நள்ளிரவில் கரோனா தொற்றாளர்கள் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 32,903 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27,637 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வீட்டுத் தனிமையில் இருப்போர் உட்பட 4,891 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாட்களில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 1,250 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பல கரோனா தொற்றாளர்கள் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸ்களிலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 5 மணி நேர காத்திருப்புக்குப் பிறகே படுக்கைகள் கிடைத்ததாக தொற்றாளர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியது:

மருத்துவமனையில் உள்ள 1,250 ஆக்சிஜன் படுக்கைகளில் சில படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவமனையில் இருந்து கடைசி நேரத்தில் கரோனா தொற்றாளர்கள் அனுப்பப்படுவதால், அட்மிஷன் போடுவதற்கு சற்று தாமதமாகிவிடுகிறது. இதனால்தான், அவர்கள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில், ஆக்சிஜன் வசதி தேவையில்லாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை வேறு படுக்கைக்கு மாற்றிய பின்னர், புதிய தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE