பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் பரவும் கரோனா தொற்று : திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் அதிருப்தி

By இரா.கார்த்திகேயன்

கரோனா தொற்று இருக்கும் என்றசந்தேகத்தின் அடிப்படையில்பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு, அதன் முடிவுகள் வெளிவர தொடர்ந்து தாமதமாகும் சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சிலர் கூறியதாவது: இரண்டு, மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாத நிலையில்தான், சளி (ஸ்வாப்) பரிசோதனைக்கு செல்கிறோம். ஆனால், அதன் முடிவுகள் வெளிவர தாமதமாகிறது. பரிசோதனை செய்பவர்களில் 10-ல் 8பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதேபோல, இன்னும் சிலர் வீடுகளில் தனி அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாத ஏழை, எளிய மக்களாகவும் உள்ளனர். ஓர் அறை, கழிவறை என பயன்படுத்தும் குடும்பங்களில், தொற்று எளிதாக மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த சூழலில்தான், தொற்று பரவுவதற்கான முக்கிய இடமாக கருதுகிறோம். உடனடியாக முடிவு கிடைத்துவிட்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், சமூகத்தில் உள்ள பிறருக்கும் பரவுவது முடிந்தவரை தடுக்கப்படும். அரசு இலவசமாக மேற்கொள்ளும் சளி பரிசோதனை (ஸ்வாப்) மூலமாகதான் பலரும்இன்றைக்கு கரோனா பரிசோதனையை உறுதி செய்கிறார்கள். சி.டி.ஸ்கேன் மூலமாக கரோனா தொற்றின் தீவிரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்றாலும், வேலைவாய்ப்பு நிரந்தரமற்ற நிலையில் அதற்காக தொகை செலவழிக்கக் கூடிய நிலையில் பல குடும்பங்கள் இல்லை.

3 நாட்களுக்கும் மேலாக

திருப்பூர் மாநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஸ்வாப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுவதில்லை. மாறாக 3 நாட்களுக்கும் மேலாவதால், உடலிலும்தொற்று முழுமையாக பரவிவிடும்சூழல் ஏற்படுகிறது. பரிசோதனை மேற்கொண்டவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக கருதிக்கொண்டு, வீடு மற்றும் மற்றும் சமூகத்தின் பல்வேறு இடங்களில் உலவும்போது பரவலுக்கும் வழிவகுக்கிறது. இதில் அரசு நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

சென்னைக்கு அனுப்பிவைப்பு

தற்போது பல்வேறு இடங்களில் சளி பரிசோதனை தீவிரமாக நடைபெறுவதால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் மாதிரிகள் மொத்தமாக குவிகின்றன. 24 மணி நேரத்தில் 4000 பேரின் பரிசோதனை முடிவுகளை கண்டறிய முடிகிறது. லேப் டெக்னிஷியன், நிரந்தர பணியாளர் மூவர் உட்பட தற்காலிக பணியாளர்கள் 6 பேர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெறப்பட்ட உதவியாளர்கள் என திருப்பூரில் 17 பேர் பணிபுரிகிறார்கள். சில நாட்களில் சளி பரிசோதனை அதிகரிக்கும்போது, திருப்பூர் ஆய்வகத்தில் செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால், சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகள் கண்டறியப்படும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

்பணியில் 17 பேர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் கூறும்போது, "கரோனா சளி பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஏற்படுவதால், பரிசோதனை முடிவுகளை அறிய மாதிரியை சென்னைக்கும் அனுப்புகிறோம். தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 17 பேர் தொடர்ந்து பணிபுரிகிறோம்" என்றார்.

தாமதம் தவிர்க்கப்படும்

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, "திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 3000 பரிசோதனை முடிவுகளை அறிகிறோம். தற்போது, ஸ்வாப் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தனியாரிடம் நாளொன்றுக்கு 1000 பேருக்கு பரிசோதனை செய்கிறோம். தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதால், முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. மாவட்டத்தில் சராசரியாக4,300 பேருக்கு பரிசோதனைகள்மேற்கொள்ளப்படுகின்றன. இனி, பரிசோதனை முடிவு தாமதமாவது தவிர்க்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்