நீலகிரி மாவட்டத்துக்கு மே 16-ம்தேதி வரை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரபிக்கடலில் உருவாகியுள்ள தாழ்ந்த நிலை, புயலாக உருப்பெற்றுள்ள காரணத்தால் மே 16-ம்தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
இது தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரிமாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்புஏற்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும், 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்களும் தயாா் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம்மற்றும் சுகாதாரப் பணிகள் துறை ஆகியவற்றுடன் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சாா்ந்த அலுவலா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.
மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசர கால மையத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதேபோல, கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் உதகை கோட்டத்தை 0423-2445577 என்ற எண்ணிலும், குன்னூா் கோட்டத்தை 0423-2206002 என்ற எண்ணிலும், கூடலூா் கோட்டத்தை 04262-261295 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். அதேபோல, உதகை வட்டத்துக்கு 0423-2442433 என்ற எண்ணிலும், குன்னூா் வட்டத்துக்கு 0423-2206102 என்ற எண்ணிலும், கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718 என்ற எண்ணிலும், குந்தா வட்டத்துக்கு 0423-2508123 என்ற எண்ணிலும், கூடலூா் வட்டத்துக்கு 04262-261252 என்ற எண்ணிலும், பந்தலூா் வட்டத்துக்கு 04262-220734 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். மின்தடை தொடா்பான புகாா்கள் ஏதேனும் இருப்பின் 1912 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago