காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு : படுக்கை, உரிய சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், படுக்கைகள் கிடைக்காமலும், உரிய சிகிச்சை இல்லாமலும் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினம்தோறும் 500-ல் இருந்து 1,000 பேர் வரை கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

முதல் அலைபோல் இல்லாமல் கரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பலருக்கு நுரையீரல் தொற்றுடன் கூடிய பாதிப்பு ஏற்படுவதால் ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள் அனைத்திலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகிடைக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல மணி நேரம்காத்திருக்க வேண்டி இருப்பதால் பலருக்கு மூச்சுத் திணறல் அதிகரிக்கிறது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கரோனா நோய் தொற்றுடன் வருபவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பதை முறைப்படுத்த ஆக்சிமீட்டரில் 90-92 சதவீதம் அளவுக்கு குறைவாகக் காட்டினால் மட்டுமே ஆக்சிஜன் கொடுப்பது என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் இருந்து 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்குப் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் தற்காலிக கரோனா வார்டாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கரோனாவை கட்டுப்படுத்தஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு மேல் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸார் தடுத்து வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளுக்குவருபவர்களை மட்டுமே போலீஸார் அனுமதிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்